தமிழக செய்திகள்

கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை- 2 பேர் கைது

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.

முட்புதரில் சிறுமி உடல்

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர்.

தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கல்விப்பிடிக்கவில்லை.

உறவினர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி தான் காணாமல் போனவர் என்பதும், அவரை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச்சென்றதும் தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியை கடத்தி சென்றவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசியதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் மற்றும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமியின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததாக கூறி சிறுமியின் உறவினர்கள் சூலூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 பேர் அதிரடி கைது

இந்நிலையில், சிறுமி கொலை தொடர்பாக கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர் மோகன் ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் எதிர்வீட்டை சேர்ந்த கார்த்திக் போலீசார் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டார். தோட்டத்திற்கு அழைத்து சென்று சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக அவர் தெரிவித்தார். கார்த்திக் அளித்த தகவலின் பேரில் மோகன்ராஜையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் குவிப்பு

சூலூர் காவல் நிலையம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிடலாம் என்பதால் முன் எச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.