தமிழக செய்திகள்

கோவை சிறுமி படுகொலை: சம்பவ இடத்தில் ஏடிஜிபி ஆய்வு

சிறுமியின் உடலை கூராய்வு செய்யும் பணி தொடங்கியது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் ஆகியோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமைச்சரிடம், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என, கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.

இதற்கிடையே, ஏரிக்கரையில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், சிறுமியின் உடலை கூராய்வு செய்யும் பணி தொடங்கியது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்படுகிறது. கூராய்வுக்கு பின்னரே கொலையின் காரணம் தெரிய வரும்.