நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் விஜய், வருகிற 11-ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி டெல்லி சென்று வந்தார்.
அங்கு பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக நலன் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார். கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அன்றைய தினம் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.
இந்தப் பயணத்தின்போது தங்களது கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்த சந்திப்பை மேற்கொள்ளாமலேயே சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், மாநில முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் டெல்லியில் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய், வருகிற11-ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல இருக்கிறார். முதலமைச்சரின் இந்த பயணத்தின்போது அவர் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.