மக்களின் பேராதரவோடு புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மிக பிரம்மாண்டமான முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஏ.ஸ்ரீநாத், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான அமைச்சர் ஸ்ரீநாத், ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கி, அவர்களது குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் திருப்புமுனையாகத் தனித்து களம் கண்டு, தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதலமைச்சராக அவர் ஏற்கும் முதல் பிறந்தநாள் என்பதால் மாநிலம் முழுவதும் தவெகவினர் இதனைப் பெரும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.