தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் விருதுநகர் எம்.பி.யாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் த.வெ.க. ஆட்சியில் இடம்பெற்றது. அதன்பின், மாநில அமைப்பை மறு சீரமைக்கும் பணியில் அக்கட்சியின் தலைமை இறங்கியுள்ளது.
தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டியில் தேர்தலுக்கு முன்பாகவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனர்.
தேர்தலுக்கு பின் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து தீர்மானம் போட்டவர் மாணிக்கம் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.