எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என முதலமைச்சர் விஜய் பேசினார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்த நான் வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்குவார் என நம்பி எனது உரையை தொடங்குகிறேன். திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள தகவலுக்கு நன்றி.
தற்போதைய ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது. தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியமைந்த பின் பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது இல்லை என்றால் திட்டமே இல்லை என்ற அறிவிப்பு தான் வருகிறது.
இதுவரை எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு மற்றொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வரும் கதாபாத்திரம் போல அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என்பது போல அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.
காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். முதலமைச்சரின் பதிலுரைக்கு மூன்று நாட்கள் நேரம் இருக்கு. நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வாங்க.
சபாநாயகர் ஜே சி.டி.பிரபாகர் :- முதலமைச்சரை பார்க்கும் போது தயார் படுத்துபவர் போல அல்ல, தயாரான நிலையில் தான் வந்திருக்கிறார் என தெரிகிறது.
இவ்வாறு சட்டசபையில் த.வெ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து த.வெ.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்களுடைய ஆட்சி காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளை மேற்கொண்ட அமல்ராஜ் ஐபிஎஸை இன்றைக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக ஏன் பதவி உயர்வு கொடுத்து வைத்தீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசுக்கு வைக்கிறேன் என்றார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும், அதற்கான தெளிவான விளக்கத்தை நான் திங்கட்கிழமை பேசுகிறேன். நான் இங்கே இல்லை என்றாலும் கூட யார், யார் என்னென்ன கேள்வி கேட்குகிறார்கள் என்பது குறித்து எனக்கு வந்துவிடும். எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என்றார்.
இதனால் த.வெ.க. தரப்பில் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு முதலமைச்சர் விஜய் அவையில் இருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும். 3 நாட்கள் நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரட்டும் என்றுதான் நான் முன்னதாகவே கூறினேன் என்றார்.