தமிழக செய்திகள்

நாளை மறுநாள் திருச்சி பயணம் - வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் வரும் வாகனத்தை யாரும் பின்தொடராதீர்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் உங்களை அவர் சந்திப்பார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வந்த இருபெரும் திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் செல்வாக்குடன் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

முன்னதாக அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். த.வெ.க. மீதான மக்களின் ஆதரவு அலையில் அவர் 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் 91,381 வாக்குகள் பெற்று, 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.

இதில் பெரம்பூரில் அவர் எம்.எல்.ஏ.வாக தொடரும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். திராவிட கட்சிகள் பாணியில் சென்டிமெண்டாக திருப்புமுனை ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் பிரமாண்ட மாநில மாநாட்டை நடத்திய அவர், தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் மக்கள் சந்திப்பு பயணம் நடத்தினார்.

அமைச்சரவையை திறம் பட நடத்தி வரும் அவர், தனது முதல் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்தார்.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்தார்.

இதற்காக முதலமைச்சர் விஜய், நாளை மறுநாள் (1-ந்தேதி) திருச்சி வருகை தருகிறார். விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட், பழைய பால் பண்ணை, சத்திரம் பஸ் நிலையம் வழியாக அதே பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் அவர் திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

மாலை 4 மணிக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய்க்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி மைதானம் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் திருச்சிக்கு வருகை தர உள்ளார். இது த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் திருச்சி வருகை குறித்த தகவலை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் இன்று தனது நிருபர்கள் சந்திப்பில் உறுதி செய்தார்.

இது தொடர்பாக கு.ப. கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். தனி விமானத்தில் வருகை தரும் முதல்வர் தனக்கான பிரத்தியேக வாகனத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி புதுக்கோட்டை சாலை, டி.வி.எஸ். டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைகிறார்.

பின்னர் அங்கே ஏற்பாடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றுவார். இந்த நிகழ்வானது நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வார்.

இன்றைக்கு தமிழக முதலமைச்சருக்கு நிகராக மூவுலகத்திலும் யாரும் கிடையாது. அவருக்கு நிகர் அவர் மட்டும்தான். தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உங்களை நாங்கள் இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம் முதலமைச்சர் விஜய் வரும் வாகனத்தை யாரும் பின்தொடராதீர்கள்.

நீங்கள் நிற்கும் இடத்தில் உங்களை அவர் சந்திப்பார். திருச்சி மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் விஜய் நிச்சயம் நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது பெருமளவில் மக்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றார்கள்.

அதன் பிறகு தேர்தலிலும் தங்கள் ஆதரவை பெருமளவில் தெரிவித்து வெற்றி பெற செய்தார்கள். முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு விஜய் இதுவரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்லவில்லை.

இப்போது முதல் முறையாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அந்த தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

முதலமைச்சர் விஜய் தங்கள் தொகுதிக்கு வருவது அந்த பகுதியில் தொண்டர்ளையும், பொதுமக்களையும் உற்சாகம் அடைய வைத்து உள்ளது. முதலமைச்சர் விஜய்யை வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.