பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சரான பின்பு டெல்லிக்கு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் செல்ல உள்ளார். தனி விமானம் மூலம் அவர் நாளை டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி விஜய் பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் இலாகாக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, புதிதாக 23 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சரவை 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டு 2 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடந்ததால் முதலமைச்சர் விஜய்யால் பயணங்கள் எதையும் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் அமைச்சரவை தற்போது முழுமையடைந்துவிட்டது. எனவே ஜனாதிபதி, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி செல்கிறார்.