தமிழக செய்திகள்

நாளை திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மக்களுக்கு விஜய் நன்றி கூறுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டார்.

இதற்கிடையே, த.வெ.க.வுக்கு வாக்களித்து, ஆட்சி பீடத்தில் அமர்த்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்களை நடத்த எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் உத்தரவிட்டார். தோல்வி அடைந்த த.வெ.க. வேட்பாளர்களும் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அதன்படி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தன்னை தேர்ந்தெடுத்த பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகி விட்டதால், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக முதலில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

அதன்படி, நாளை முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்ல இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் பழைய பால் பண்ணை, சத்திரம் பஸ் நிலையம் வழியாக திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

தொடர்ந்து, மாலை 4 மணிக்கு திருச்சி, புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மக்களுக்கு விஜய் நன்றி கூறுகிறார். இதற்காக அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட இருக்கிறார்.

இந்த நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட உள்ளது.