மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார்.
மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த காலக்கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும்.
மேட்டூர்அணையில் தண்ணீர் இருப்பை தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் குடிநீருக்காக திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன்காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சேலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், எம்.எல்.ஏக்கள் மற்றும் கலெக்டர் இளம்பகவத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் மேட்டூர் புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களை பார்த்த முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தப்படி சென்றார்.
மேலும் விஜய்யை வரவேற்று சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு மேட்டூர் அணை பகுதிக்கு வந்தடைந்தார்.
பின்னர் முதலமைச்சர் விஜய் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின்விசையை 11.40 மணிக்கு இயக்கி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் பூக்கள், நெல் மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.
தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் அணையின் இதய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீராய்வு நிலவறையை பார்வையிட்டார். மேலும் மேட்டூர் அணையின் இடது புறமுள்ள மின்நிலையத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நின்ற கட்சி நிர்வாகிகள், விவசாயிகளை பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முதலமைச்சர் நெல் மணியை கொடுத்தார். விவசாயிகள் அவருக்கு பச்சை துண்டை அணிவித்தனர். அப்போது அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார்.
முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலில் 3ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட நிலையில் பின்னர் நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் நீர்திறப்பு 12ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அணையின் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின்உற்பத்தி தொடங்கப்படும்.
இந்நிலையில் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். சேலம் மாவட்டம் சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றார். அங்கிருந்த மூதாட்டி முதலமைச்சர் விஜயின் கையை பிடித்து அழைத்து சென்றார்.
அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக விவசாயி கூறுகையில், முதலமைச்சர் திடீரென எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.