சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜயை சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.
தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.