தமிழக செய்திகள்

அப்துல் கலாமின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை - முதலமைச்சர் விஜய்

இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் உயரிய சிந்தனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் நம் மனதில் நிறுத்தி, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் இலட்சியப் பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தபோதிலும், 'ஆசிரியர்' என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் உயரிய சிந்தனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் நம் மனதில் நிறுத்தி, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT