தமிழக செய்திகள்

'வெற்றிப் பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.

வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், சென்னை கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை கடந்த தி.மு.க. அரசு அறிமுகம் செய்தது.

த.வெ.க. தேர்தல் வாக்குறுதி

இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பஸ்களில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து அரசு பஸ்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

வெற்றிப்பயணம்

தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டு, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், மகாத்மா காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் விஜய்

இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் கிடையாது. அதோடு. வெற்றிப் பயணத் திட்டம், இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

ரூ.6 ஆயிரம் கோடி

இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக கட்டணமின்றி பஸ்களில் பயணிக்க இயலும்.

இத்திட்டத்தின் கீழ் திருநரும் (திருநங்கைகள்) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.

12,692 பஸ்கள்

தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பஸ்கள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். ஆனால் வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்கள், புறநகர் சாதாரண அரசு பஸ்கள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண அரசு பஸ்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பஸ்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகம்

அதாவது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தமுள்ள 18,413 பஸ்களில், 12,692 பஸ்கள் (69 சதவீதம்) இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். அதுபோல், மொத்தமுள்ள 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகளில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 312 நடைகள் (85 சதவீதம் இந்தத் திட்டதில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.

வெற்றிப்பயணம் திட்டம் தொடக்கம்

வெற்றிப் பயண பஸ்களின் மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களுடனான (இ.டி.எம்.) இணைப்பு பணி நிறைவடைந்துள்ளது. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரி பார்ப்பு பணிகளும் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஆகஸ்டு 27-ந் தேதியன்று சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து வெற்றிப்பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவச அரசு பஸ் பயணம் மேற்கொண்டு பயனடையலாம்.

டிக்கெட் வழங்கிய முதலமைச்சர் விஜய்

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் 76B பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முதலமைச்சர் விஜய் டிக்கெட் கொடுத்தார்.

டிக்கெட் பெற்ற சில பெண்கள் சாக்லெட்டுகளை வாங்கி சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

பஸ்சில் டிக்கெட் வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு கை கொடுத்தும், சாக்லெட் கொடுத்தும் பெண்கள் மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT