தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம் உறுதி..?- அமைச்சர் வினோத் ரவி முக்கிய தகவல்

முதலமைச்சர் விஜய் ஆகஸ்டு 3-ந்தேதி கர்நாடகா சென்று முதலமைச்சரை சந்திப்பார் என கூறிய நிலையில் மாற்றம்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனிடையே காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

கர்நாடகா பயணம்

இந்தநிலையில் காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருகிற 3-ந்தேதி கர்நாடகத்துக்கு வருமாறு முதலமைச்சர் விஜய்க்கு, அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி கர்நாடகா சென்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வார் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி நேற்று முன்தினம் கூறி இருந்தார்.

முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்வார் என்று தான் கூறிய தகவலை அமைச்சர் வினோத் ரவி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் வினோத் ரவி இன்று காலை கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தலைமை அறிவிக்கும்

அப்போது அவர்,"மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்றார்.

பெங்களூரில் நடை பெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் ஆகஸ்டு 3-ந்தேதி கர்நாடகா சென்று முதலமைச்சரை சந்திப்பார் என கூறிய நிலையில் இன்று கர்நாடக பயணம் குறித்து தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.