முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

மகளிருக்கான விரிவுப்படுத்தப்பட்ட கட்டணமில்லா வெற்றிப்பயண திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு திட்டம் அங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மகளிர் இலவச பஸ் பயண திட்டம் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்படுகிறது. 12,692 பஸ்களில் செயல்படும் இந்த திட்டம் மூலம் நாளொன்றுக்கு 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள். மாணவிகள், பணியாளர்கள், மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கட்டணமின்றி பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மகளிருக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தின் கீழ் தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் நகர சாதாரண பஸ்கள் மற்றும் 40 கி.மீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பஸ்களில் மகளிர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

வெற்றிப்பயணம்

முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இந்த வெற்றிப் பயணம் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் கடந்த 24.8.2026 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை த.வெ.க. அரசு முதன்மையாக கொண்டு உள்ளது என்றும், இதனை கருத்தில் கொண்டு மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயணித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சர் விஜய் நாளை காலை 10 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று இந்த வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இலவச பயணம்

அங்கு காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

எக்ஸ்பிரஸ், எல் எஸ் எஸ், டீலக்ஸ் பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு இலவச பயண டிக்கெட்டை விநியோகம் செய்து வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

வெற்றி பயணம் திட்டத்தின் மூலம் மாநகர நகர் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல் எஸ் எஸ், டீலக்ஸ், அரசு பஸ்கள், புறநகர் சாதாரண பஸ்கள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பஸ்கள் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 12,692 பஸ்கள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

இதன் மூலம் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18 ஆயிரத்து 413 திட்டமிடப்பட்ட பஸ்களில் 12,692 பஸ்கள், மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகளில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 312 நடைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் தமிழக மகளிர்க்கான எளிதில் அணுகக் கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணம் இன்றி பஸ்களில் பயணிக்க முடியும்.

இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த திட்டம் அங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT