தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வரும்நிலையில், தமிழ்நாடு அரசின் கூட்டம் நடைபெற உள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்படுகிறது.

தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.