தமிழக செய்திகள்

மாதவரம் பால் பண்ணையில் ஆவின் மாதிரி மத்திய ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

முதலமைச்சர் விஜய் மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதோடு, அங்கு நடைபெறும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 17 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மாதவரம் பால் பண்ணையில் மட்டும் தினமும் 4.50 லட்சம் லிட்டர் பால் கையாளப்பட்டு நுகர்வோரின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சராசரியாக 120 வாகனங்கள் மூலம் வடசென்னை பகுதிகளில் பால் வினியோகப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் விஜய் ஆய்வு

மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் பால் கையாளும் மற்றும் பால் வினியோகப் பணிகளை பார்வையிட முதலமைச்சர் விஜய் இன்று காலை மாதவரத்துக்கு நேரில் சென்றார். அவரை பார்ப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து முதலமைச்சர் விஜய் கையசைத்தபடி சென்றார்.

மாதவரம் பால்பண்ணைக்கு சென்ற அவரை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு பால் பண்ணையை முதலமைச்சருக்கு சுற்றி காண்பித்தனர்.

பால் பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள ஆவின் மாநில, மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தைத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

இந்திய தர நிர்ணய ஆணையம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தர நிலைகளின்படி குடிநீர் சோதனைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கழிவுநீர் சோதனைகள் செய்வதற்காக, அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆவின் மாநில, மத்திய ஆய்வகத்தின் துணைக்கட்டிடம் இதுவாகும்.

நவீன உபகரணங்கள்

இந்த ஆய்வகமானது, நவீன உபகரணங்களின் உதவியுடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் தேவைகளுக்கான அனைத்துத் தரப் பரிசோதனைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாதவரம் பால் பண்ணை

முதலமைச்சர் விஜய் மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதோடு, அங்கு நடைபெறும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாதவரத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை 152 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

தானியங்கி தொழில்நுட்பம்

இது முழுமையான வசதிகளுடன் தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன பால் பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, இப்பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

அதன் பிறகு முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்றனர். முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர்களைப் பார்த்து முதலமைச்சர் விஜய் கையசைத்தபடி சென்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயலட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் விஜய்பிரபு, செந்தில்குமார், வீட்டு வசதித்துறை தலைவர் சிவா, பால்வளத் துறை செயலாளர் அனுஜார்ஜ், ஆவின் எம்.டி.சிவராசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT