தமிழக செய்திகள்

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் 3-வது நாளாக ஆலோசனை

போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மேலும் பேசுபொருளானது.

முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் கார்த்திக், போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், உளவு பிரிவு ஐ.ஜி. அஸ்ரா கார்க், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சங்கர், ஐ.ஜி.க்கள் அன்பு, பவானீஸ்வரி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனை

தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கொலை - கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் த.வெ.க. ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், தேனி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மேலும் பேசுபொருளானது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கடந்த 2 நாட்களாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று 3-வது நாளாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT