முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் நாளை பிரசாரம்

பொதுக்கூட்டத்தில் அதிகளவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதலமைச்சர் விஜய், நாளை பிரசாரம் செய்கிறார்.

தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. அந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும், வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதலமைச்சர் விஜய், நாளை பிரசாரம் செய்கிறார். இதன் காரணமாக தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள மாருதி நகரில், சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக பிரமாண்ட மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராட்சத கிரேன்கள் மூலம் இரும்பு பீம்கள் கொண்டு வரப்பட்டு, மேடை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பார்வையாளர் பகுதி, தடுப்புகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டத்தில் அதிகளவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்துக்கு வருகை தருகிறார். இதனையடுத்து தாராபுரம் நகர் மற்றும் முக்கிய இடங்களில் சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணியும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT