இசைஞானி இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள், ''நலம் வாழ எந்நாளும்.. என் வாழ்த்துகள்.. தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்'' இளையராஜாவின் அலுவலகம் முன்பு பாடல் பாடி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் அரசியல் தலைவர்களும் இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.