தமிழ்நாடு முதலமைச்சர், காவலர் வீரவணக்க நாளில் வீரமரணம் அடைந்த 7 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி காப்பீட்டு தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, மரக்கன்றை நட்டு, காவல்துறையினரின் தியாகத்தை போற்றினார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததை நினைவுகூரும் வகையிலும், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் இந்தநாள் காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள் அவ்வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 6 காவலர்கள் உட்பட இந்தியாவில் 154 காவலர்கள்/அதிகாரிகள் பணியின்போது வீரமரணம் அடைந்துள்ளனர். இவர்களது உயிர்த்தியாகம் போற்றுதலுக்குரியது.
இந்நிகழ்ச்சியில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ.அமல்ராஜ், இ.கா.ப., காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியின்போது உயிர்நீர்த்த காவல்துறையினரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.