தமிழக செய்திகள்

அய்யா ராமதாஸ் விரைந்து நலம்பெற விழைகிறேன்- மு.க.ஸ்டாலின்

அய்யா ராமதாஸ் நல்ல முறையில் உடல்நலம் தேறி வருகிறார்.

சேலம் மேற்கு தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் அருள் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மருத்துவர் இராமதாசு ஐயா விரைந்து நலம்பெற விழைகிறேன்.

சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் ஐயா ராமதாசை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் நல்ல முறையில் உடல்நலம் தேறி வருகிறார்.

மருத்துவர் ஐயா அவர்கள் முழுவதுமாக குணமடைந்து, விரைந்து தமது பொதுவாழ்க்கைப் பணிகளைச் சிறப்புறத் தொடர்ந்திட வேண்டும் என விழைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.