தமிழக செய்திகள்

பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.பங்காரு அடிகளார் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

மாலை மலர்

சென்னை:

ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.