தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஞாயிறன்று பேசும் போது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200 இடங்களை வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய நயினார் நாகேந்திரன், "நாங்கள் (பா.ஜ.க.) 27 இடங்களை வெல்லப் போகிறோம். நாங்கள் மிக சிறப்பாக திட்டமிட்டு, தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.
இம்முறை, தமிழக NDA கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறப்போகிறது. நாங்கள் 200 இடங்களுக்கு மேலாகப் பெறுவோம். முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும் பொய் மட்டுமே பேசுகிறார். அவர் தமிழக மக்களை பணத்தின் மூலம் ஏமாற்றி வருகிறார்," என்றார்.
முன்னதாக மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசும் போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கும் என்று முழு நம்பிக்கை உள்ளது," என்றார்.