மத்திய அரசு மக்களவையில் கொண்டு வந்த தொகுதி மறுவரை மசோதா தோல்வியடைந்ததை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டாசு வெடித்து கொண்டாடினார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலை ஒட்டி திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பரப்புரைக்கு செல்லும் வழியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமலாக்கவும், இதற்கு ஏற்ற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850 வரை அதிகரிக்க வழிவகை செய்யும் அரசமைப்பு சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்றும் வகையில் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரை திருத்த மசோதா உள்ளிட்டவைகளுக்கான வாக்கெடுப்பு நேற்று (ஏப்ரல் 17) மாலை நடைபெற்றது. இதில் 489 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு கூட்டத்தொடரில் 534 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
இதன் காரணமாக மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற மூன்றில் ஒருபங்கு வாக்குகள் கிடைக்காததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.