முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கும் முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டம் நகர்ப்புற ஏழை மக்களின் வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை வழங்கும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் வகையில், குடிசை இல்லாத் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் ஒப்புதல்

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் (EWS) வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) பழுதடைந்த குடியிருப்புகளை மறு கட்டுமானம் செய்வதற்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கும் முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்திட்டம் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன வீட்டுவசதி அலகுகளை உள்ளடக்கியது. அதன்படி, 1,401.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை, அனாதைக்குப்பம் திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடிக் குடியிருப்புகள், பழைய பிளாக் வியாசர்பாடி திட்டப்பகுதியில் 1,158 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டப்பகுதியில் 1,484 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ருக்மணி நகர் திட்டப்பகுதியில் 111 அடுக்குமாடிக் குடியிருப்புகள், முல்லை நகர் திட்டப்பகுதியில் 462 அடுக்குமாடிக் குடியிருப்புகள், உதயசூரியன் நகர் திட்டப்பகுதியில் 850 அடுக்குமாடிக் குடியிருப்புகள், பச்சைக்கல் வீராசாமி தெரு திட்டப்பகுதியில் 912 அடுக்குமாடிக் குடியிருப்புகள், மேற்குக் கல்லறை சாலைத் திட்டப்பகுதியில் 792 அடுக்குமாடிக் குடியிருப்புகள், கக்கன் காலனி திட்டப்பகுதியில் 324 அடுக்குமாடிக் குடியிருப்புகள் என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT