கல்லறை திருநாள் நாளை (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இறந்த நம் முன்னோர்களின் கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி உறவினர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இதற்காக கல்லறைகளை புதுப்பித்தும் சுத்தம் செய்தும் புதிதாக கட்டியும் கிறிஸ்தவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.
இதனை சகல ஆத்மாக்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், கல்லறை திருநாள் விசேஷமாக அனுசரிக்கப்படும். அங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. 16 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கல்லறை தோட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இதனை கத்தோலிக்க திருச்சபையும் தென்னிந்திய திருச்சபையும் (சி.எஸ்.ஐ.) இணைந்து நிர்வகித்து வருகின்றன. 125 ஆண்டுகள் பழமையான இந்த கல்லறை தோட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் கல்லறைகள் இடம்பெற்று உள்ளன. 1903-ம் ஆண்டு முதல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனை மெட்ராஸ் சிமிட்டி போர்ட் டிரஸ்ட் நிர்வகித்து வருகிறது. இதன் தலைவராக சிஎஸ்ஐ ஜெயசீலன் ஞானதிக்கம், துணைத் தலைவராக ஆல்பர்ட் ஜேக்கப், செயலா ளராக வி.எஸ். ஜெபராஜ், பொருளாளராக டாக்டர் போஸ்கோ உள்ளனர்.
நாளை நடைபெறுகின்ற கல்லறை திருநாளையொட்டி அந்தப் பகுதி முழுவதும் இருந்த புல் பூண்டுகள் செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செயலாளர் வி.எஸ். ஜெபராஜ் கூறியதாவது:-
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் சகல ஆத்துமாக்கள் தினம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனுசரிக்கப்படுகிறது. காங்கிரீட் சாலைகள், 400 விளக்கு வசதி , கல்லறைகளை எளிதில் அடையாளம் காண சர்வே செய்யப்பட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
கழிப்பிட மற்றும் குடிநீர் வசதியும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக கல்லறைகளை சுற்றி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.
சி.எஸ்.ஐ. சார்பில் சிறப்பு வழிபாடு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. பிஷப்பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன், பேராய மகளிர் அணி தலைவர் இந்திரா பால் மற்றும் பேராய அலுவலர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
கத்தோலிக்க திருச்சபை சார்பில் மாலை 4.30 மணிக்கு வழிபாடு நடைபெறுகிறது. கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அதில் கலந்து கொள்கிறார்.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கல்லறை திருநாளை அனுசரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.