தமிழக செய்திகள்

சிட்லப்பாக்கம் பகுதியில் மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீர்

கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்படும் குடிநீரின் நிறம் மாறி மஞ்சள் நிறமாக வருகிறது.

சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, வீடுகளுக்கு வினியோகிக்கும் குடிநீர் துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறமாக வருகிறது.

சிட்லபாக்கம், எம்.எம்.டி.ஏ. நகர், பவானி தெரு, பாபு தெரு, பரதன் தெரு, ராஜேஸ்வரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்படும் குடிநீரின் நிறம் மாறி மஞ்சள் நிறமாக வருகிறது. மேலும் தண்ணீர் துர்நாற்றமும் வீசுவதாகவும், கழிவுநீர் கலந்தது போன்று இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

காய்ச்சல்

இந்த குடிநீரை பயன்படுத்துவதால், காய்ச்சல், இருமல், சருமத்தில் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள், உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சிட்லபாக்கம்

இதுகுறித்து சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, வீடுகளுக்கு வினியோகிக்கும் குடிநீர் துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறமாக வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி பணியாளர்களிடம் பலமுறை புகார் தெரிவித்த போதும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடல் நீர்

அதிகாரிகள் கூறும்போது, உங்கள் பகுதிக்கு வழங்கப்படும் தண்ணீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதால், இதுபோன்றுதான் இருக்கும். நீங்கள் குடிநீரை பில்டர் செய்து, பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள்.

மக்கள் குடிநீர்

குடிப்பதற்கு மட்டுமின்றி, சமையல் பணிகளுக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் இப்பகுதி மக்கள் குடிநீர் கேன்கள் வாங்கி சமாளித்து வருகிறார்கள்.

இந்த கழிவுநீர் கலந்த தண்ணீரை, குளிப்பதற்கு, துணிகளை சலவை செய்வதற்கு போன்றவைகளுக்கு பயன்படுத்தினால் கூட, பாதிப்பு ஏற்படுகிறது. தோல் அலர்ஜி மற்றும் சலவை செய்த துணிகளும் துர்நாற்றம் வீசுகிறது.

தாம்பரம் மாநகராட்சி

எனவே தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, குடிநீரின் தரத்தை பரிசோதித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், நெமிலிச்சேரியில் இருந்து, குரோம்பேட்டை ராதா நகர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு, சோதனை ஓட்டமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தக் குடிநீர் பைப் லைன்கள், நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது குடிநீர் விநியோகம் தொடங்கியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

சிட்லபாக்கம் பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், இந்த தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீர் சில வீடுகளில் நிறம் மாறி வருவதாக புகார்கள் வந்தன. ஆனால் எல்லா வீடுகளுக்கும், அதைப்போல் வரவில்லை. பல வீடுகளுக்கு நல்ல தண்ணீர் வருகிறது.

பாதிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு எதனால் ஏற்பட்டது? என்று ஆய்வு செய்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்த குறைகள் முழுமையாக சரிசெய்யப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT