ஏரியில் மூழ்கி பலி
தமிழக செய்திகள்

சின்னசேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போயர் தெருவை சேர்ந்த சிறுவன் ராஜா(வயது13). சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவர்கள்

சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சிறுவர்கள் இமானுவேல்(11), சாம் ஆபிரகாம்(7). இவர்கள் 2 பேரும் சகோதரர்கள்.

நேற்று காலை இமானுவேல், சாம் ஆபிரகாம், ராஜா ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் விளையாட சென்ற 3 சிறுவர்களும் மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியாகினர். அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் சிறுவர்களை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயம்

உடனடியாக இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள காடு மற்றும் கிணறு பகுதிகளிலும் தேடி பார்த்தனர். ஆனாலும் எங்கு தேடியும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள தோட்டப்பாடி ஏரிக்கு சென்றார். அப்போது அங்கு 3 சிறுவர்கள் மிதந்து கொண்டிருந்தனர்.

பிணமாக மீட்பு

இதனை பார்த்து அதிர்ச்சியான அவர் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அது மாயமான சிறுவர்கள் இமானுவேல், சாம் ஆபிரகாம், ராஜா ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஏரியில் இறந்த நிலையில் கிடந்த 3 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகக்கின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT