கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
மீன்பிடி தடைக்காலத்தில் சின்னமுட்டம் துறைமுகத்தில் தான் அனைத்து விசைப்படகுகளும் நிறுத்தப் பட்டிருக்கும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, இந்த விசைப்படகுகள் அனைத்தும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கசென்றன. முதல் நாளான நேற்று 298 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஏராளமான மீன்களுடன் நேற்று இரவு கரை திரும்பினர். மீனவர்கள் கொண்டு வந்த மீன்களை இரவோடு இரவாக ஏலம் விட்டுவிட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் தயாராகினர். அதிகாலை முதல் ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன.
கன்னியாகுமரி சின்னமுட்டம் சிங்காரவேலன் தெருவை சேர்ந்த டென்சன் என்பவருக்கு சொந்தமான கப்பல் மாதா என்ற விசைப்படகில் அதிகாலை 5 மணியளவில் 20 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தயாரானார்கள். சின்னமுட்டம் செபஸ்தியார் தெருவை சேர்ந்த விசைப்படகு ஓட்டுனர் ரவீண்டன் படகை இயக்க முயற்சித்தார்.
அப்போது விசைப்படகில் இருந்த பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த விசைப்படகு தீப்பிடித்தது எரிந்தது. இதையடுத்து படகில் இருந்த 20 மீனவர்களும் கடலில் குதித்தனர். அவர்கள் கடலில் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். விசைப்படகில் பற்றி எரிந்த தீயை அணைக்க மீனவர்கள் முயன்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் காற்று அடித்ததால் தீ படகு முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. ஆகவே அந்த தீ விபத்து குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விசைப்படகில் பிடித்த தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இருப்பினும் அந்த விசைப்படகு முற்றிலுமாக எரிந்துவிட்டது. சுமார் ரூ1.25 கோடி மதிப்புடைய விசைப்படகு முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சின்னமுட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு விசைப்படகில் பிடித்த தீயை அணைத்ததால், சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின. மேலும் தீப்பிடித்த விசைப்படகில் இருந்த 20 மீனவர்களும், படகு தீப்பிடித்து எரிய தொடங்கியதுமே கடலில் குதித்து நீந்தி கரைக்கு வந்துவிட்டதால் அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் விசைப்படகுகளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த நேரத்தில், விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது.