தமிழகத்தில் தவிப்பிற்குள்ளாகும் மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ‘சைல்டுலைன்’ உதவி மைய ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஆபத்திலுள்ள குழந்தைகளைக் காக்கவும், அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கவும் '1098' என்ற இலவச தொலைபேசி சேவை 'சைல்டுலைன்' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இந்த சேவை மாநில அரசுகளின் முழுப் பொறுப்பில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த அவசர உதவி மையங்களை அரசே நேரடியாகக் கண்காணித்து வருகிறது.
அரசுத் துறை இந்த சேவையைத் தன் வசம் எடுத்த பிறகு, நிதி ஒதுக்கீட்டில் நிலவும் சுணக்கம் காரணமாகப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சைல்டுலைன் அமைப்பில் பணியாற்றும் களப் பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய மாதங்களிலும் ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமல், 40 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தங்களின் சொற்ப ஊதியத்திலும் பி.எஃப், மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படைப் பலன்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் பணிகளுக்காகக் களத்தில் செலவிடப்படும் பயணப் படிகள் கூட வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகள் நலனுக்கான அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சைல்டுலைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்னையைத் தீர்த்து வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் சைல்டுலைன் பணியாளர்கள் முதல்நிலை மீட்பர்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கப்படாமல் வாழ்வாதாரம் முடங்கினால், அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பணியை விட்டு விலக நேரிடும்.
இதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு உடனே தலையிட்டு இந்த நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.