சபாநாயகர்  
தமிழக செய்திகள்

முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது - சபாநாயகர் சொன்ன காரணம்

கலைஞர் கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார்

முதலமைச்சர் விஜய் நேற்று சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியவற்றை அவைகுறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த முதலைச்சர் விஜய், 1970களில் ஒரு நபர் விசாரணை ஆணையமான சர்க்காரியா கமிஷன், திமுக ஊழல்கள் செய்ததாக தந்த அறிக்கை பற்றியும் அதை முன்வைத்து கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தையும் குறிப்பிட்டு பேசினார்.

அதில் குறிப்பாக, வீராணம் திட்டத்தின் கீழ் குழாய் தயாரிப்பு டெண்டருக்காக அப்போதைய திமுக அரசின் கீழ் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன், சத்யநாராயணா பிரத்ர்ஸ் என்ற நிறுவனத்திடம் இன்ஸ்டால்மென்டில் ரூ.29 லட்சம் லஞ்சம் வாங்கினார் எனவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் ஒதுக்க கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் எனவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் பேசினார்.

திமுக வலியுறுத்தல்

இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் தவிர எதுவும் நிரூபிக்கப்படவில்லை ஆதலால், திமுக நேற்று அவையில் கடும் அமளியில் ஈடுபட்டது. மேலும் சபாநாயகர் பேச அனுமதி தராததால் அவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

இந்த சூழலில் இன்று அவை தொடங்கியதும் திமுக கொறடா எவ வேலு, நேற்று முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய விஷயங்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.

சபாநாயகர் பதில்

இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிரபாகர்,

"நேற்று இந்த சபையில் முதலமைச்சர் பதிலுரை அளித்தார். அவர் பேச ஆரம்பித்து முடிக்கும் வரைக்கும் திமுக உறுப்பினர்கள் யாராவது அதை கவனித்து கேட்டீர்களா என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.

எனது அனுமதி இல்லாமல் போஸ்டர்களை எல்லாம் கொண்டுவந்து காண்பித்தீர்கள். அதற்கு நான் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நிமிடம் கூட அவர் பேச்சை யாருக்கும் கேட்கவில்லை. சத்தம் போட்டுகொண்டு தான் இருந்தீர்கள்.

முதலைச்சர் நேற்று அவையில் பேசிய சில ஆதாரங்களை முன்கூட்டியே என்னிடம் காட்டினார். அவைகள் இந்த அவையிலே சர்க்காரியா கமிஷன் பற்றி எப்படி எல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பலமுறை சொல்லப்பட்ட செய்தியை தான் அவர் படித்தார். புதிதாக எதுவும் சொல்லவில்லை. மிசாவிலே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது உண்மை செய்திதான். முரசொலி மாறன் பற்றி ஏற்கனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை தான் அவர் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறையை பற்றி சொல்லும்போது பொதுத் தளத்தில் இருக்கும் செய்தியை தான் இங்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். அதை அவையில் சொல்வது பொருத்தமானது தான். நீங்கள் (திமுக) ஆட்சியில் இருக்கும்போது அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களை நீங்கள் வெளியிடுவதற்கோ நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆனால் புதிய அரசாங்கம், அமலாக்கத்துறை கொடுத்த ஆணவம் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளது.

அமலாக்கத்துறை சொன்னத்தை தான் முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே தவிர தீர்ப்பு பற்றியோ, அதன் மீதான நடவடிக்கை பற்றியோ அவர் பேசவில்லை.

ஒரு துறை, ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. எனவே அவைகுறிப்பில் இருந்து அவர் பேசியதை நீக்க வேண்டிய தேவை இல்லை என்று நான் அறிவிக்கிறேன்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT