சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்

தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். பொதுத்துறை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது பயணிகள், ஊழியர்கள் மீது சுமை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமருக்கு கடிதம்

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கண்டனம்

ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

சென்னை விமான நிலையம் தனியார்மயமாக்க முதல்வர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாக வெளியான செய்திக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்குத் துணைப்போகக்கூடிய வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதத்தை எழுதி இருந்தால் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.

எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT