தமிழக செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சி செல்கிறார்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விடுபட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வாழ்வாதாரம் தேடி வரும் மக்கள் தங்குவதற்கு, வசதி ஏற்படுத்தும் வகையில் இந்தத் துறை செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக முதலமைச்சர் விஜய் எனக்கு இந்த வாரிய பொறுப்பை வழங்கியுள்ளார். இந்தப்பொறுப்பில் சிறப்பான முறையில் செயல்பட்டு முதல்வருக்கு நல்ல பெயர் பெற்றுத்தருவேன்.

வீடுகள் தேவைப்படுபவர்கள் வெளிநபர்களை தொடர்பு கொள்ள வேண்டாம். அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்களிடம் மனு அளியுங்கள். உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விடுபட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட பணிகளில் விஞ்ஞான ரீதியாக ஏதேனும் தவறுகள் நடைபெற்றிருந்தால், தவறு செய்தவர்கள் மீதும் தவறுக்குக் காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடகாவில் அரசியல் பிரச்சனைகள் எழும்போது காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தைக் கையில் எடுப்பது வாடிக்கையானது. மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இங்குள்ள அரசியல் கட்சிகளும் சரி, தமிழர்களும் சரி அதில் ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் கஜானா துடைத்தெறியப்பட்டுள்ளது. நிதிநிலை குறித்து விரைவில் தமிழக முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி மக்களுக்கு நன்றி சொல்ல விரைவில் திருச்சி வருகை தர உள்ளார். தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்க முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு..கவின் பொதுச்செயலாளர் கிடையாது.

சைதாப்பேட்டையில் குடியிருப்பில் தலித் மக்களுக்குத் தனியாக குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, சென்னையில் ஆட்சியில் இருந்த பலர் ஊழல் செய்துள்ளனர். பதவி பறிபோனவர்கள் ஆதங்கத்தில் மக்களை தூண்டிவிட்டு கொண்டு உள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்று 27 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. அப்படி இருக்கும்போது அவர் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும்? கணினி முறையில் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

த.வெ.கவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, குதிரை பேரம் என்றால் என்ன? நாங்கள் என்ன குதிரை வாங்க அரேபியாவிற்கா செல்கிறோம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது அவர்களுடைய சொந்த விருப்பம்

இவ்வாறு அவர் கூறினார்.