மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு என 5 முனைப்போட்டி நிலவுகிறது.
த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் பிரசாரம் நாளை (4-ந்தேதி) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதன் காரணமாக தலைவர்கள் தங்கள் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் நேற்று மதுராந்தகத்தில் ரோடு ஷோவாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டிராக்டர் ஓட்டியும், தேநீர் கடையில் டீ குடித்தும் வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தார்.
முதல்-அமைச்சர் விஜய் ஏற்கனவே தாராபுரத்தில் கடந்த 30-ந்தேதி ரோடு ஷோவாக சென்று மக்களை சந்தித்தார். மேலும் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு த.வெ.க. வேட்பாளரை சத்ய பாமாவை ஆதரித்து பேசினார்.
இந்த நிலையில் தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாளை (4-ந்தேதி) மீண்டும் அவர் அங்கு சென்று வாக்கு சேகரிக்க உள்ளார். நாளை அவர் திறந்தவேனில் நின்றபடி ரோடு ஷோவாக மட்டும் சென்று ஓட்டு வேட்டை நடத்துகிறார்.
தாராபுரம் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்கிறார். இதற்காக ஹெலிபேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து முதலமைச்சர் விஜய், மாருதி நகரில் பிரசார வாகனத்தில் ஏறி ரோடு ஷோ தொடங்க உள்ளார். அங்கிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளுக்கு ரோடு ஷோவாகச் சென்று விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். 30 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார்.
நாளை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் விஜய்யை சந்திக்க அதிக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், போக்குவரத்தைச் சீர்செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர்.
விஜய் பயணிக்கும் பாதைகள் முழுவதும் சி.சி.டி.வி. மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் வந்து செல்லும் சாலைகளில் பொதுமக்கள் நின்று பார்க்க வசதியாக சாலைகளின் இருபுறமும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.