சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை (ஜூன்.9) நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவின் ஒரு பகுதியாக, சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்ததோடு,
அவரே ஒரு ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, மைதானத்தைச் சுற்றி ஓட்டிப் பார்த்து அங்கிருந்த காவலர்களையும், பொதுமக்களையும் உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் பதவியேற்றபோது, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மேடையிலேயே கையெழுத்திட்ட முக்கிய கோப்புகளில் ஒன்று "சிங்கப்பெண் அதிரடிப்படை" திட்டம்.
இப்படைப்பிரிவு முழுமையாக முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும். இதன் தலைவராக ஐஜி கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், போன்ற பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் குற்றங்களைத் தடுத்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.