தமிழக செய்திகள்

மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

முதலமைச்சர் விஜய்யை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கோடை கால மின்சாரம் போதுமானதாக உள்ளதா? வெளிமாநிலங்களில் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது? போன்ற விவரங்களை கேட்டறிந்தார். தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து மின்சார வினியோகம் செய்வதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் விஜய்யை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கி வரும் முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.

மேலும், இந்த கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனமாகக் கேட்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பயணத்தில், பிரதிநிதிகள் குழுவின் வழிகாட்டுதலும், பரிந்துரைகளும் தொடர்ந்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் சேர்மன் வேலு, இணைத் தலைவர்கள் பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் சுதர்சன், டிரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.