தமிழக செய்திகள்

தொலைநோக்கு பார்வையுடன்கூடிய பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் பாராட்டு

2026-2027ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்க செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத்திற்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

இதில், விவசாயிகளுக்கான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

முதலமைச்சர் விஜய் பாராட்டு

இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோரை முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.