ஆதவ் அர்ஜூனா மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நேற்றில் இருந்து புதுசா ஒரு கேள்வி கேட்க ஆரம்பிட்டாங்க. தேர்தலுக்கு முன்னதாக எந்த ஊருக்கும் முதலமைச்சர் விஜய் போகவில்லை. ஒரு மாவட்டம் சென்றாரு. ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம்தான் போக முடிந்தது. கொளத்தூரிலேயே 5 நிமிடம்தான் பேசினார்.
இப்போது இரண்டு தொகுதிகளில் த.வெ.க.-வுக்கு பயம் வந்துடுச்சி. தமிழக முதலமைச்சர் பயந்திட்டாரு. அமைச்சர்கள் எல்லாம் பயந்துட்டாங்க. முதலமைச்சர் பொதுக்கூட்டம் போட்டாரு. 42 கி.மீ. நான்கரை மணி நேரம் ரோடு ஷோ செய்றாரு. கிராமம் கிராமமாக போறாரு. டீக்கடைக்கு போறாரு. விவசாயிகளை பார்க்கிறாரு. டிராக்டர் ஓட்றாரு. முன்னாடி போகாதபோது ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா.., அப்படி சொன்னாங்க., அதே கும்பல் இப்போது விவசாயிகளை பார்த்து, கிராமத்திற்குள் போய்..,
அவர்களுக்கெல்லாம் (எதிர்க்கட்சி) டிராக்டர் ஓட்டவும் தெரியாது. ஏறவும் தெரியாது. கொஞ்சம் வயிற்றெரிச்சல் இருக்கும்ல.
பயந்துட்டாங்க என ஒரு பிரசாரம். 42 கட்சிகள் ஒரு பக்கம். தனியா நின்ற நாங்கள் பயந்திட்டோமா?. 75 வருட கட்சி திமுக, 25 கட்சி கூட்டணிகளை போட்டு, தொகுதிகளுக்கு 40 கோடி ரூபாய் செலவு செய்து, எல்லா அமைச்சர்களையும் இறக்கி, தேர்தல் முடிவு வரும் வரை நெஞ்சை நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். 15 அமைச்சர்கள் தோல்வி. அவர்களுடைய தலைவரே தோல்வியடைந்த பிறகு இன்னும் நம்மல பார்த்து பயந்திட்டிங்களா, பயந்திட்டிங்களா என கேட்டுகிட்டு இருக்காங்க.
மதுரை மாநாட்டிற்குப் பிறகு தலைவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று நினைக்கும்போது 234 தொகுதிகளும் போக வேண்டும் என்று நினைத்தோம். 234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் 20 முதல் 30 கி.மீ. இப்படித்தான் (மதுராந்தகம் ரோடு ஷோ) போக முடியும். திருச்சி மீட்டிங் நடந்துச்சி. ஏர்போட்டில் இருந்து செல்ல 7 மணி நேரம் ஆனது. 14 கி.மீட்டருக்கு 7 மணி நேரம் ஆனது.
அவர்கள் ரோடு ஷோ நடத்தினால் ரோடு இருக்கும். மக்கள் இருக்கமாட்டாங்க. நேற்று திமுக தலைவர் ரோடு ஷோ சென்றாரு. 2 மணி நேரத்துல ரோடு ஷோவை முடிச்சிட்டாங்க. அதற்கு மேல் இருந்தா மக்கள் யாரும் இருக்க மாட்டாங்க. அதற்கு மேல் இருந்தால் மீட்டர் காசு. அப்படி ஒரு ரோடு ஷோ நடத்திட்டு பெருமையா பேசுகிறாரு.
அதன்பின் ஊருக்கு ஒதுக்குப்புறம் 10 ஏக்கர் நிலத்தை எடுத்து தொண்டர்களுக்கு டோக்கன் கொடுத்து பிரசாரம் செய்ய திட்டமிட்டோம். நீங்கள் பேசுங்க. அதை டி.வி.யில், சமூக வலைத்தளங்களில் 5 கோடி பேர் பார்ப்பார்கள் என்றோம். ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை இப்படித்தான் பிரசாரம் நடந்தது. நீங்களும் பார்த்து இருப்பீர்கள். காஞ்சிபுரத்தில் அனுமதி கொடுக்கவில்லை. மரிய வில்சன் காலேஜ் மைதானத்தில் மீட்டிங் போட்டோம்.
234 தொகுதிகள் போக நினைத்தோம், 38 மாவட்டங்கள் போக நினைத்தோம். போக முடியல. அனுமதி மீறி சென்றால் ஏதாவது பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று அப்போது பயம். பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நம்முடைய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் முன்னதாக சென்று ஆய்வு செய்வார்கள். எந்த எஸ்.பி. சப்போர்ட் செய்கிறாரோ, அந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்வோம்.
இதனால் திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்ற திட்டம் ரத்து செய்யப்பட்டது. இப்போ நிரூபித்தோம் அல்லவா, அது காவல்துறைதானே., ஏனென்றால் எங்கள் அண்ணன் முதலமைச்சர். ஒரு தொகுதிக்கு அனுமதி கேட்டோமே, அதே ரூட் மேப்பை எடுத்து, நீங்கள் எங்க வேண்டுமென்றால் போங்கள் அண்ணே, டீக்கடை முதல் எந்த இடத்திற்கும் செல்லுங்கள். நேற்று நடந்ததா இல்லையா?. இந்த காவல்துறைதானே செஞ்சுச்சி. இப்போது தெரியுதா திமுக-வின் சூழ்ச்சி.
பயந்துட்டாங்களா என்று டி.வி.யிலும், தொலைக்காட்சியிலும் வாய் கிழிய பேசிக்கிட்டு இருக்கிறீர்களே, 40 கட்சிகளே இருந்து பயப்படல. திமுக-வின் இருந்த கூட்டணி கட்சிகள் எங்கள் பக்கம் வந்துட்டாங்க. உங்ககிட்ட பணம் பட்டும்தான் இருக்கு. இங்கு அன்பும், நம்பிக்கையும், தலைவரும் இருக்காங்க.
நம்மல பார்த்து பயந்துட்டாங்க.., 9-ந்தேதி மாலை 3 மணிக்கு ரிசல்ட் தெரியும். அப்போது யார் யார பார்த்து பயந்தாங்க என்பது தெரியும். பெண்களும், இளைஞர்களும் திரும்பவும் முகத்தில் ஓங்கி அரையும் வகையில் ஒரு முடிவை கொடுப்பாங்க. பேசுவதை விட தேர்தல் வெற்றியை உருவாக்க வேண்டும்.
நேற்று 80 ஆயிரம் சாலைகளில் வந்திருப்பாங்க. 42 கி.மீ. தூரத்தில் 80 ஆயிரம் மக்கள் நின்று பார்த்து இருப்பார்கள். இதை முன்னாடியே செய்திருக்கலாமே, போன ஆட்சில செஞ்சிருக்கலாமே, 80 ஆயிரம் பேர் ஒரு இடத்தில் நின்றார்களா? இரண்டே இரண்டு இடங்கள் கொடுக்கிறோம் என்றார்கள். அங்கே வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் என்பதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் 10 ஆயிரம் பேர் நிற்க வேண்டிய இடத்தில் 30 ஆயிரம் பேர் நிற்பாங்க. பார்க்க முடியாதவங்க வண்டிக்கு பின்னாடி வருபவர்கள் 10 ஆயிரம் பேர் வருவாங்க. இதனால்தான் கரூரில் பிரச்சனை ஏற்பட்டது. நேற்று 42 இடங்கள். 42 கி.மீட்டருக்கு 42 ஸ்பாட். ஒருநாளைக்கு முன்னதாக மக்களிடம் சொல்லிவிட்டோம். நீங்கள் ஒரு இடத்தில் நிற்காதீங்க. 42 இடங்கள் உள்ளது என்றோம். மக்கள் பரவலாக நின்றார்கள். பார்த்தார்கள். அமைதியாக கிளம்பிட்டாங்க. யாராவது ஒருவருக்கு அடி பட்டிச்சா. பிரச்சனை ஏற்பட்டதா?. இதுதான் கரூரில் திமுக-வின் சூழ்ச்சி. நாம் நடத்தி காண்பித்திருக்கோம்ல.
சின்ன சாலை வழியாக சென்று மக்களை பார்த்தால் ஆதரவு அதிகமாகிவிடும் என்று தேர்தலுக்கு முன்னதாக பார்க்க விடல. வீட்ல உட்கார வை. வெளியில் வரக்கூடாது. இதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய அரசியல். அநியாய அரசியல்.
நேற்று மு.க. ஸ்டாலின் தாராபுரம் பிரசாரத்திற்கு சென்றார் யாராவது தடுத்து நிறுத்தினார்களா? இதான் அண்ணனின் நியாயமான ஆட்சி.
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.