இடைத்தேர்தலை முன்னிட்டு மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை மேற்கொண்ட தேர்தல் பிரச்சார ரோடு ஷோவை முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாக நிறைவுசெய்தார்.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்பாராத ராஜினாமாவால் தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்காக களத்தில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக இத்தேர்தல் ஆளும் தவெகவிற்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. காரணம் இத்தேர்தலில் தவெக வெற்றிப்பெற்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியைத் தொடரலாம்.
இதனைக்கருத்தில் கொண்டு தீவிர பிரசாரத்தில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதனால் முதலமைச்சர் விஜயும் பிரசாரத்தில் பங்குபெற்று வருகிறார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரங்களைத் தொடர்ந்து இன்று மதுராந்தகத்தில் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு , 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக முதலமைச்சர் விஜய் தனது பிரசாரப் பயணத்தை மேற்கொண்டார்.
மதுராந்தகத்தின் தேரடியோடு ரோடு ஷோவை முடித்துக்கொண்டார். இதன்போது எல். எண்டத்தூர் பகுதியில் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்த ஒரு தேநீர் கடையில் அமர்ந்து டீ குடித்தார்.
மேலும், வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் கலந்துரையாடி, அங்கு டிராக்டர் ஓட்டியும் அசத்தினார். இடையில் பெண்குழந்தை ஒன்றிற்கு பெயரும் சூட்டினார்.