தமிழக செய்திகள்

TN Assembly Election | தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

* தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

* தமிழ்நாட்டில் 2.77 கோடி ஆண் வாக்காளர்கள், 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

* 14.59 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

* வாக்குப்பதிவு மையங்களுக்கள் மொபைல் எடுத்து செல்ல முடியாது.

* தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.

* 4 கட்டுப்பாட்டு மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

* தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 65 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்.

* பிரச்சனைக்குரியதாக கண்டறியப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* காவல்துறையினர் மட்டுமின்றி 300 கம்பெனி துணை ராணுவப்படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

* தமிழகம் முழுவதும் ரூ.1,262 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், மதுபானம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.