சென்னையின் 2வது விமானம் நிலையம் அமைக்க செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தேர்வு செய்துள்ளது விஜய் தலைமையிலான தவெக அரசு.
இந்த 2 இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மணலூர் ஆகிய இடங்களை இடங்களை ஆய்வு செய்யுமாறு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி என்பது நேற்று இன்று தொடங்கியதல்ல; அது சுமார் 3 தசாப்தங்களாக தொடர்ந்து வரும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கதையாகும்.
1999-ல் தேடுதல் தொடங்கியது. அன்று முதல், இன்றுவரை மாறி மாறி அமையும் அரசுகள் பல இடங்களை பார்வையிட்டு, பரிசோதித்து இடத்தை தேர்ந்தெடுத்தாலும், கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.
1999-ஆம் ஆண்டிலேயே தேடுதல் பணி தொடங்கிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொழில்துறை மையமான ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில், 4,000 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு சாத்தியமான இடத்தை மாநில அரசு 2007-ஆம் ஆண்டில் அடையாளம் கண்டு ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், அரசுக்குச் சொந்தமான நிலம் சுமார் 800 ஏக்கர் மட்டுமே இருந்ததால், தேவையான இன்னும் 3200 ஏக்கர் நிலம் கையகப்படுத்துதல் என்பது சவாலாக அமைந்தது. மேலும் அடுத்து வந்த அரசு என அரசியல் காரணங்களாலும் இந்த இடம் கைவிடப்பட்டது.
இச்சூழலில் 2021-ல் திமுக ஆட்சி அமைத்தபோது இந்தத் திட்டம் வேகம் பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் திட்டம் கைவிடப்பட்ட பிறகு, மாநில அரசு திருப்போரூர், பரந்தூர், பண்ணூர் மற்றும் படாளம் ஆகிய இடங்களைப் பட்டியலிட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை மதிப்பிட்ட பின்னர், பரந்தூர் மற்றும் அதன் அருகிலுள்ள பண்ணூர் எனத் தேர்வை இரண்டாக குறைத்தது.
இவ்விரு இடங்களும் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்-சுங்குவர்சத்திரம் தொழிற்பேட்டைக்கு அருகில் அமைந்திருந்தன.
இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியான ஒப்புதலையும், இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தொழில்நுட்ப-பொருளாதார அனுமதியையும் மாநில அரசுப் பெற்றது.
பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த புதிய விமான நிலையம் 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் பரப்பளவில் ரூ. 29,143 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த க லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் தயாரித்தது.
கட்டுமானப் பணிகள் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டிருந்தன. முதல் கட்டத்திற்கு மட்டும் ரூ.13,854 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
விமான நிலையத்துடன் பல சாலை, மெட்ரோ மற்றும் தளவாடத் திட்டங்களும் திட்டமிடப்பட்டிருந்தன.
பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு, 2022 ஆகஸ்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே போராட்டங்கள் தொடங்கின. காரணம் நிலத்திற்கான இழப்பீட்டைத் தாண்டி, இடப்பெயர்வே மக்களை அதிகம் மனம் நோக செய்தது.
தலைமுறை, தலைமுறையாக பல தசாப்தங்களாக வாழ்ந்த இடத்தைவிட்டு, தங்களுக்கு உணவிட்ட இடத்தைவிட்டு விலகுவது உயிரை உடம்பிலிருந்து பிடுங்குவத்கு சமமானது. கிராமங்களின் ஒரு பகுதி அல்ல, ஒட்டுமொத்த கிராமங்களும் இடம்பெயர வேண்டிய சூழல் நிலவியது.
ஆண்டுக்கு முப்போக விளைச்சலை தரும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், பல நீர்நிலைகளும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் விவசாயிகளும், சம்பந்தப்பட்ட கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வாதிட்டனர்.
அரசு, நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிக இழப்பீடு வழங்க முன்வந்ததோடு, இடம்பெயரும் குடும்பங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதாகவும் உறுதியளித்தது. இருப்பினும் ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 4 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏகனாபுரம் போராட்டத்திற்கு மையக்களமாக அமைந்தது. காரணம் ஏகனாபுரம், முன்மொழியப்பட்ட ஓடுபாதையின் வழித்தடத்தில் நேரடியாக அமைந்திருந்தது.
இச்சூழலில்தான் புதிய கட்சித் தொடங்கிய விஜய், ஏகனாபுரம் மக்களை சந்தித்து தங்கள் ஆட்சி அமைந்தால் இத்திட்டம் கைவிடப்படும் தேர்தல் வாக்குறுதியும் அளித்தார்.
அவர் கூறியவாறே நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்த நிலையில், பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாவும், மாற்று இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
விவசாயிகள், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் என தவெக அரசுக்கூறியது.
இந்நிலையில் சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்களாகச் செய்யூர் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறுகள் (Pre-feasibility study) குறித்த ஆய்வினை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
அவர்களின் தொழில்நுட்ப அறிக்கை வந்த பிறகே சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போகும் இறுதி இடம் எதென்று முடிவாகும்.
இடம் தேர்வு செய்யப்பட்டாலும், புதிய இடமும் அதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலம் கையகப்படுத்துதல், இடப்பெயர்வு மற்றும் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் என இங்கும் பல தடைகளை எதிர்கொள்ள நேரும்.
தற்போது இருக்கும் அதே அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டே இத்திட்டத்தை கொண்டு செல்வதுதான் தவெக அரசுக்கு தற்போது இருக்கும் சவாலாகும்.