சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (16), விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மாணவர்களிடையே யார் ‘சீனியர்’ என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பள்ளி முடிந்து அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் அடங்கிய கும்பல் தனுஷை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தின் பின்புறப் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலையானவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்சாகா (27) என்பதும், பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக, மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பீகாரைச் சேர்ந்த சன்னிசதா (26) என்பவரைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டுக் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் எல்லைக்கு உட்பட்ட சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாவின் மூத்த மகன் ரஞ்சன் (18). இவர் தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி ஒன்றின் மீது ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில், இரும்பு உருக்கு ஆலையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஞ்சனும், அவரது நெருங்கிய நண்பரான காமேஷ் (22) என்பவரும் சம்பவத்தன்று இரவு ஒன்றாக மது அருந்தியதும், போதையில் ஏற்பட்ட முன்பகைத் தகராறில் காமேஷ், ரஞ்சனைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷை பாதிரிவேடு காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.