சென்னையில் கடந்த சில வாரமான கடுமையான வெப்பம் காணப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் இன்று இரவு மிதமான மழை செய்ததால் மக்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.
இரவு 8 மணி முதல் சென்னை வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அண்ணா நகர், ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
மேலும், எழும்பூர், அண்ணா சாலை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், தி.நகர் ஆகிய பகுதிகளில் இதமான சாரல் மழை பெய்தது.
இன்று நள்ளிரவு 1:00 மணி வரை தமிழகத்தின் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.