தமிழக செய்திகள்

சென்னையை ஏமாற்றி வரும் வடகிழக்குப் பருவமழை: நாளை உருவாகும் புதிய புயல் சின்னம் கைகொடுக்குமா?

டிசம்பர் மாதத்தில் சென்னையில் கணிசமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும், தலைநகர் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்குப் போதிய மழை பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் நாளை உருவாகவுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னைக்குக் கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் போதிய மழை இல்லாதது ஏன்?

கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் சென்னையில் சில நாட்கள் பரவலாக மழை பெய்தது. ஆனால், அதன்பிறகு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைப்பொழிவு வெகுவாகக் குறைந்துள்ளது.

சென்னையில் அவ்வப்போது மழை பெய்தாலும், நகரம் முழுவதும் பரவலாகப் பெய்வதில்லை. ஒரு பகுதியில் மழை பெய்யும்போது மற்றொரு பகுதி வறண்டே காணப்படுகிறது. பெய்யும் மழையும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்து நின்றுவிடுகிறது.

கடந்த மாதம் இறுதியில் வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ ஆகிய 2 புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தன. சமீபத்தில் உருவான ‘அக்வான்’ புயலும் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைக்கு இடையே கரையைக் கடந்தது.

இவ்வாறு அடுத்தடுத்து உருவான புயல்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தை நோக்கி வரவேண்டிய மழை மேகக்கூட்டங்கள் திசைமாறிச் சென்றுவிட்டன. தென் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வந்தாலும், சென்னையில் மழை பெய்யாததால் குடிநீர் ஏரிகளின் நீர்மட்டமும் குறைந்துள்ளது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, டிசம்பர் முதல் வாரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய புயல் சின்னம் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் பட்சத்தில், டிசம்பர் மாதத்தில் சென்னையில் கணிசமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT