தமிழக செய்திகள்

சென்னையில் இன்றும் மழை தொடருமா... அடுத்த 2 வாரங்களுக்கு மழை எப்படி இருக்கும்?- பிரதீப் ஜான் விளக்கம்

எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதியில் கனமழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 30-50 மி.மீ. பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26-ந்தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, "மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.

மோன்தா புயலால் சென்னையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோன்தா புயலால் வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும், தென் சென்னையில் தூறல் மழை அடுத்த 2 மணி நேரம் வரை தொடரும். பின்னர் மழை படிப்படியாக குறைந்து நிற்கும்.

வட சென்னையில் 60-70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதியில் கனமழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 30-50 மி.மீ. பதிவாகியுள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாது" என்று தெரிவித்துள்ளார். 

Montha Final Update - Steady rains in North Chennai and Drizzles in South Chennai will continue to 2 hours and then the rains will reduce and slowly stop. Rains Recorded. North Chennai 60-70 mm with Ennore and Kathivakkam being very close to sea recorded heavy rains.South… pic.twitter.com/vMGaELbBFJ