தமிழக செய்திகள்

"ஒருபக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்” - த.வெ.க.வுக்கு ஆர்.எஸ். பாரதி சவால்

அடிமடையனுக்கு கூட தெரியும் 1984 தேர்தல் குறித்து.

நேற்று முன்தினம் சென்னை, ஆர்.கே. நகரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா" மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவியை, ஒரு மெழுகுவர்த்தியை கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார்.

உதயநிதிக்கு நேருக்கு நேர் ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர விருக்கிறது.

25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள். எங்களுடைய பல்லவி சகோதரி எப்போது அவமானப்படுத்தப்பட்டாரோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம்" என்று கூறினார்.

இந்நிலையில் ஆதவ் கருத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று பதிலளிக்கையில், "உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் வர முடியுமா என்று ஆதவ் அர்ஜுனா சவால் விடுகிறார். அடிமடையனுக்கு கூட தெரியும் 1984 தேர்தல் குறித்து.

1984 தேர்தலுக்கு பின்னர் 1986 உள்ளாட்சி தேர்தலில் 102 நகராட்சியில் 90 நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

திமுக தோன்றிய காலத்தில் இருந்து பல தோல்விகளை கண்டுள்ளோம். எங்களைப் போல வெற்றி பெற்றவர்களும் கிடையாது.

முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை வையுங்கள், ஒரு மேயர் இடத்திலாவது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்.

ஸ்டாலினுக்கோ உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடுகிற தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை. விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனா தான்" என்று தெரிவித்தார்.