தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

மஞ்சள் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மஞ்சள் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ரெயில் சேவை நேரம் மாற்றப்படுவது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்," பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையத்தை இணைக்கும் மஞ்சன் வழித்தடத்தில் நவம்பர் 24-ஆம் தேதி (செவ்வாய் கிழமை) முதல் காலை நேர மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அக்டோபர் 2026-இல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையத்தை இணைக்கும் மஞ்சன் வழித்தடத்தில் பயணிகள் சேவையை தொடங்கியது

இந்த பகுதியில் மீதமுள்ள 7 மெட்ரோ நிலையங்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக மஞ்சள் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேரம் மாற்றம்:

பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தற்போது மஞ்சள் வழித்தடத்தில் காலை 6:00 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை அமையவுள்ள புதிய மெட்ரோ நிலையங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், மஞ்சள் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 24-ஆம் தேதி முதல் மஞ்சன் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 6:00 மணிக்கு பதிலாக காலை 7:00 மணிக்கு தொடங்கும்.

கூடுதல் நேர அவகாசம்:

போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி இடையேயான பகுதியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கத்திற்கான தானியங்கி சிக்னல் அமைப்பு சோதனை உள்ளிட்ட பல்வேறு ரெயில் பரிசோதனை பணிகளை தடையின்றி விரைவாக மேற்கொள்வதற்காகவே இந்த கூடுதல் நேர அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக நேர மாற்றத்தால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது. இருப்பினும், போரூர் வடபழனி இடையேயான மீதமுள்ள நிலையங்களை விரைவில் திறந்து, மெட்ரோ இணைப்பை மேம்படுத்தவும் பொதுமக்களின் பயணத்தை மேலும் எளிதாக்கவுமே இந்த நடவடிக்கை அவசியமாகிறது.

எனவே, பயணிகள் அனைவரும் இந்த புதிய காலை நேர மாற்றத்தை கவனித்து அதற்கேற்ப தங்களது பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT