தமிழக செய்திகள்

சர்ச்சையில் சென்னை மெட்ரோ ரெயில் விளம்பரம்-தலைவர்கள் கண்டனம்

சென்னை மெட்ரோ ரெயிலின் உள்ளே பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அச்சிடப்பட்டுள்ள விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்

சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஓன்றாக மெட்ரோ ரெயில் சேவை இயங்கி வருகிறது, குறிப்பாக அனுதினமும் மெட்ரோவில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பெண் நண்பர் வைத்திருந்தால் 0% வட்டி. ஆனால் எங்கள் நிலையான வைப்பு நிதி 14.40% வட்டி தருகிறது" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருப்பதே சர்ச்சைக்கான காரணமாகும்.

வலுக்கும் கண்டனம்

சி.ஐ.டி.யு.

சென்னை மெட்ரோ ரெயிலில் இப்படி ஒரு விளம்பரம் அச்சிடப்பட்டிருப்பது நியாயமா? முதலாளித்துவம் பெண்களை ஒரு போக பொருளாக , விளம்பர பொருளாக , முன்னிறுத்துகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்

பெண் நண்பரால் ஆதாயம் இல்லை வட்டியால் ஆதாயம் என ஏன் ஒப்பிடுகிறீர்கள் உடனடியாக இந்த விளம்பரத்தை மெட்ரோ நிர்வாக எடுத்திட வேண்டும் என்று, சி.ஐ.டி.யு (CITU) மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் விளம்பரத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் எம்.பி

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் ரெயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன.

குறிப்பாக, மெட்ரோ ரெயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், “பெண் நண்பர் (Girlfriend) 0% வட்டி தரலாம்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான ஆணாதிக்க மனப்பான்மையையும் பிரதிபலிக்கிறது.

பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்திற்குரியது.

மெட்ரோ ரெயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது.

இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனைத் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்திருகிறார்.

அதிருப்தியில் பொதுமக்கள்

இந்த விளம்பரம் பெண்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும்,தவறான முறையில் சித்தரிப்பதாகவும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வளைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT