முன்னாள் சென்னை காவல் ஆணையரும், தற்போதைய தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை தலைவருமான அருண் ஐ.பி.எஸ்.-ஐ சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இதோடு ரியல் எஸ்டேட் அதிபருக்கு எதிராக அவர் பதிவு செய்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமிநாராயணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக இருப்பவர் சந்தோஷ் ஷர்மா. இவர் அடுக்குமாடி குடியிருப்புகளை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து பணமோசடி செய்த புகாரில் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை காவல்துறை ஆணையராக அருண் ஐ.பி.எஸ். இருந்தபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான உத்தரவு 2025 செப்டம்பர் மாதம் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. தற்போது அருண் ஐ.பி.எஸ். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையின் தலைவராக உள்ளார். சந்தோஷ் ஷர்மா மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து அவரது மகள் வர்ஷா ஷர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தோஷ் ஷர்மா மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அருண் ஐ.பி.எஸ்.-இன் செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.